Friday, August 2, 2013

தமிழ் மரபு அறக்கட்டளை மையம்

அன்புடையீர்

வணக்கம் .

நமது எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்களின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் நேற்று பதிக்கப்பட்டுள்ளது.. ஆம்  எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கலை அறிவியல் கல்லூரியில் இந்தியாவில் முதன்முறையாக (கல்லூரி வளாகத்தில் )தமிழ் மரபு அறக்கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது . பன்னாட்டு அமைப்பின் மையமாக இயங்கிவரும் இந்த அமைப்பின் குறிஞ்சி மலர் போல 12 வது ஆண்டில் நமது கல்லூரியும் இணைந்துள்ளது பெருமை மிக்கது . கடல் அலை போன்ற எம்பெருமைமிகு மாணவர் முன்னிலையில் தமிழ் மரபு அறக்கட்டளை மையத்தை பன்னாட்டு மையத்தின் தலைவரும் பண்பாளருமான முனைவர் . நா . கண்ணன் அவர்கள் தொடங்கி
வைத்த நிகழ்வு வரலாற்று சிறப்பு வாய்ந்தது ....


             இந்த அமைப்பு எம் கல்லூரியில் அமைக்க முதலில் விருப்பதை
தெரிவித்த மரியாதைக்குரிய சுபாசினி அவர்களுக்கும் அவர்களை அறிமுகம் செய்த வல்லமை பெற்ற திருமதி. பவள சங்கரி அவர்களுக்கும்  நன்றிகள் ...

        "எண்ணிய முடிதல் வேண்டும்
          நல்லவை எண்ணல் வேண்டும்''
என்ற பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து வரும் எமக்கு
எப்போதுமே உற்சாகம் அளித்து வரும் எங்கள் கல்லூரியின் தலைவர்
அவர்களுக்கும் , எங்களை நல்வழி படுத்தும் முதல்வர் அவர்களுக்கும்
நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ..

விழா சிறக்கவேண்டும் என்பதற்காக கடந்த பலவாரங்களாக தொடர்ந்து
அயராது உழைத்த எம் சக பேராசிரிய பெருமக்கள் , கலை நிகழ்ச்சிகளால்
அலங்காரம் செய்த மாணவ கண்மணிகள் , அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

முனைவர் . கண்ணன் அவர்களோடு இருந்த இந்த நாட்களை என்னால் மறக்க
முடியாது .. அவர்களின் பேரறிவு , எளிமை , உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்
.. நேற்று அவரை நான் மேடையில் சொன்ன வார்த்தைகளைத்தான் சொல்ல தோணுகிறது.  ஆம் '' தமிழுக்கு கிடைத்திட்ட நவீன உ.வே.சா ..''.. ஒரு குழந்தை போல அவர் எல்லோரிடமும் கேட்டு தெரிந்துகொள்ளும் தன்மை ... எங்களை மெய்சிலிர்க்க வைத்த பெரியவர் ..

மீண்டும் ஒருமுறை சுபா அவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தமிழ் வழியாக இணைந்துள்ள நாம் அனைவரும் தமிழுக்கு தொண்டாற்ற இந்த அமைப்பு பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் ..

எம் கல்லூரியில் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அது
மாணவர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றால் சிறிதும் தயங்காமல் என்னை அதற்கு ஒருங்கிணைப்பாளராக ( nss co-ordinator, fm co-ordinator) அமர்த்தி என்னை அழகு பார்க்கும் எம் கல்லூரியின் தலைவருக்கும்
முதல்வருக்கும் நன்றிகள்

                               '' நம்மை உயர்த்திய தமிழை
                                  நாமும் உயர்த்துவோம் ''


நம்பிக்கையுடன்
முனைவர்.நா.சங்கரராமன்
தமிழ்த் துறை
எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி
குமாரபாளையம்

Wednesday, July 31, 2013

தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு மையத் திறப்பு விழா

வணக்கம்.

எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் தமிழ் மரபு மையம் இன்று தொடக்க விழா காண்கின்றது.  தமிழ் மரபு அறக்கட்டளையின் 12 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் அமைகின்றது. காரணம் மாணவர்கள் தமிழர் மரபு, பண்பாடு அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இது காறும் பட்டறைகளும் சிறப்பு சொற்பொழிவுகளும் ஆண்டு தோறும் அவ்வப்போது நடத்தி வந்த தமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் இப்பணிகளின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மாணவர்களுக்கான மரபு மையத்தை தொடங்கி வைக்கின்றது.

இந்த முயற்சியில் முழுதும் உடன் இருந்து மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் செவாலியர் டாக்டர் மதிவாணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாணவர் நலம் பொது அறிவு வளர்ச்சி என்பது ஒரு புறமிருக்க தமிழர் மரபு, பண்பாட்டு நலன் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இவரது ஆர்வம் ஆச்சரியப்படுத்துவது.

கல்லூரி முதல்வருக்கும், நிர்வாகத்தினருக்கும், பேராசிரியர், ஆசிரியர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்தினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது. மாணவர்களுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்கள்.

முனைவர்.சுபாஷிணி
ஜெர்மனி
தமிழ் மரபு அறக்கட்டளை.